14 January 2026

கம்பராமாயணக் காட்சிகள் (Glimpses of Kamba Ramayanam)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 

மற்றும் 

பொங்கல் வாழ்த்துகள்! 

2026-ஆம் ஆண்டின் முதல் பதிவே கன்னல் சுவையினும் இனிய கவிச்சுவையாம் கம்ப ராமாயணம் என்னும் இன்தமிழ்க் காப்பியம் சார்ந்து இருப்பது மகிழ்வளிக்கிறது. சிட்னியில் வசிக்கும் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள் எழுதியுள்ள 'Glimpses of Kamba Ramayanam' நூலுக்கான விமர்சனத்துடன் இவ்வாண்டின் பதிவுகளை இனிதே தொடங்குகிறேன்.



யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,

வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை – பாரதி

கம்பராமாயணத்தை இயற்றப் புகுமுன், என்னதான் தன்னை, பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடிக்க ஆசைப்படும் பூனையாய்த் தன்னடக்கத்தோடு குறிப்பிட்டாலும், கம்பனின் கவி மேதைமையையும் தண்ணிகரில்லாத் தமிழ்ப்புலமையையும் ஐயமின்றி ஆராதிப்பவர்கள் நாம். கம்பராமாயணத்தின் காவியத்திறத்தை காலந்தோறும் போற்றிப் புகழ்பவர்கள் நாம்.

பன்மொழி அறிஞரும் தமிழ்த்திறனாய்வாளருமான வ.வே.சு.ஐயர் இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1917-ஆம் ஆண்டு வெளியிட்ட ‘கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை’ என்னும் நூலில்,

“நமது முன்னோர் கம்பனுக்கு ‘கவிச்சக்கரவர்த்தி’ என்று பேர் தந்தது வெறும் புகழ்ச்சி அல்ல: அது உண்மை உரைத்தலே ஆகும். கவிதா லோகத்தின் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்கள் எல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடிசாய்த்து வணங்க வேண்டியதுதான்! மேல் நாட்டாருக்குள் கவிச் சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மொலியேர், கதே ஆகிய இவர்கள், கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதான் இருக்கிறார்களே ஒழிய, அவனை மீறவில்லை. நமது நாட்டிலும் கச்சியப்பர், இளங்கோவடிகள், சாத்தனார், நன்னைய பட்டன், சந்த பட்டன், துளசிதாஸர், காளிதாஸன் முதலிய மகா கவிகளைக் கம்பனோடு தூக்கிப் பார்த்தாலும், தராசு முனை கம்பன் பக்கம்தான் சாயுமேயொழிய, அவர்கள் பக்கம் சாயாது.” என்கிறார்.


அது மட்டுமா? வியாசனையும் வால்மீகியையும் கூட ஒப்பீட்டுக்கு அழைக்கிறார். “வியாஸ பாரதம் ஒரு சம்ஹிதை (வேத மந்திரங்களின் தொகுப்பு) என்பதால் அதையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல, கவிதாரீதியாக மாத்திரம் ஒப்பிட்டுப் பார்த்தால் கம்ப ராமாயணம் வியாஸ பாரதத்துக்குச் சமமாகவாவது இருக்குமே தவிர எள்ளளவு கூடத் தாழாது” என்றும் “கவிகளில் ஆதியானவரும், ராமாயணத்துக்கே முதல் நூலாசிரியரும், கம்பனாலாயே தன்னால் ஏணி வைத்துப் பார்த்தாலும் எட்டமுடியாதவர் என்று கூறப்பட்டவருமான வால்மீகி முனிவரின் கவிதா சாமர்த்தியத்தை கம்பனுடைய சாமர்த்தியத்தினும் மேலானது என்று சொல்ல வேண்டாமா என்ற கேள்வி பிறக்கும். ஆனால் இரண்டு காவியங்களையும் பாரபட்சமில்லாமல் சிரத்தையொடும் பொறுமையோடும் படித்துப் பார்த்தால் வழி நூலானது முதனூலை வென்றுவிட்டது என்று சொல்லவேண்டியதாய் இருக்கிறது” என்றும் குறிப்பிடுகிறார்.  

இங்ஙனம் உலக மகாக் கவிஞர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் தமிழன்னையின் தவப்புதல்வனாம் கவிச்சக்கரவர்த்தி கம்பனை தமிழென்னும் மொழி வரையறைக்குள் வைத்து நமக்கு நாமே சிலாகித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

தமிழ் அறியாதோரிடத்தும் கம்பனின் காவியத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்திடும் முகமாகவும், அயல்மொழி அறிந்தோரும் கம்பராமாயணம் என்னும் அருந்தமிழ்க் காப்பியத்தின் சுவையைக் குறைவிலாது ரசித்து இன்புறும் வண்ணமும், ஆங்கிலவழிக் கல்வி பயின்ற தமிழ் மக்களின் அடுத்தச் சந்ததியினர் கம்பனின் ஆழ்ந்த தமிழ்ப்புலமை கண்டு அதிசயித்துக் கொண்டாடும் பொருட்டும் ஆவன செய்திருக்கிறார் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள். பிரத்தியேகச் சிரத்தை எடுத்து ஆங்கிலம் வழியே தமிழ்ப் பாக்களை எளிதாய்ப் புரிந்துகொள்ள வழி செய்துள்ள நூலாசிரியர் இந்நூலை எழுதியதன் மூலம் அந்த சீரிய பணியைச் சிறப்புறச் செய்து முடித்திருக்கிறார். கம்ப ராமாயணப் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதுமாறு அவரை ஊக்குவித்த அவருடைய பிள்ளைகட்கு நமது நன்றி என்றென்றும் உரித்தாகுக!

கம்பராமாயணத்தின் செய்யுட் பாடல்களைப் புரிந்து ரசிக்க எல்லாராலும் இயல்வதில்லை. ஆர்வம் மேலிட, பயில முனைந்தாலும் காலம் கைகூடுவதில்லை. ஓய்ந்து உட்காரவும் நேரமின்றி துரிதகதியில் ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் முழு காவியத்தையும் வாசித்து ஆய்ந்து விளங்கிக்கொள்வதற்கான நேரமோ பொறுமையோ பலருக்கும் அமைவதில்லை. தமிழின்பால் தாளாத மையலுடனும் கம்பராமாயணத்தை வாசித்து இன்புற இயலவில்லையே என்னும் ஆதங்கத்துடனும் எட்ட நின்று ஏங்கியவர்களைக் கைப்பிடித்து அழைத்துவந்து அற்புதமான காப்பிய விருந்து படைத்திருக்கிறார் முனைவர் அவர்கள்.

கரும்பு தின்னக் கூலியா? என்பார்கள். இவரோ கரும்பை மென்று துப்பும் வேலையைக்கூட வாசகர்க்குத் தரவில்லை. கரும்பினைப் பிழிந்து சாறெடுத்து, வடிகட்டி, அவ்வினிய சாற்றைக் குவளையில் ஊற்றி, கையில் கொடுத்துள்ளார். ரசித்து ருசித்து பருகுவதொன்றே வாசகர் பணி.

Glimpses of Kamba Ramayanam நூலை மொழிபெயர்ப்பு நூல் எனப் பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட இயலாது. இது மொழிபெயர்ப்புக்கும் அப்பாற்பட்டது. மொழிப்புலமை பெற்றவர்களால் சிறுகதைகளையும் புதினங்களையும் எளிதாக மொழிபெயர்த்துவிட இயலும். கவிதைகளையும் கட்டுரைகளையும் கூட மொழிபெயர்த்துவிட முடியும். ஆனால் காப்பியங்களை? அதுவும் அவற்றின் கவிதையழகு கெட்டுவிடாமல்?

Poetry is what gets lost in translation - Robert Frost

மூல மொழியில் இருப்பவற்றைத் துல்லியமாக மொழிமாற்றம் செய்வதால் மாத்திரம் ஒரு மொழிபெயர்ப்புப் படைப்பின் நோக்கம் நிறைவு பெறாது. படைப்பும் முழுமை அடையாது. மொழியோடு அம்மொழி பேசும் மண் சார்ந்த மக்களின் இயல்பும் வாழ்வியலும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும். அவர்களுடைய கலாச்சாரம், பண்பாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிவழியாய்த் தொடரும் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் யாவும் உரிய விளக்கத்தோடு மொழிபெயர்க்கப்படல் வேண்டும். காவியத்தின் அழகும் கவித்திறமும் சந்த நயமும் கோடிட்டேனும் காண்பிக்கப்படல் வேண்டும். ஒரு நிலத்தின் மொழியை அதன் பண்பாடும் கலாச்சாரமும் சிதையாமல், அதே சமயம் அவற்றைப் பற்றி சற்றும் அறிந்திராத வேறொரு நிலத்தின் மொழிக்குக் கடத்துதல் பெரும் சவாலான விஷயம். அந்தச் சவாலை மிக அநாயாசமாகக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள்.

கம்பராமாயணத்தின் 118 படலங்கள் உள்ளடக்கிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து மிகுந்த சிரத்தையோடு 108 பாடல்களை மட்டும் தெரிவு செய்து கம்பராமாயணத்தின் ரசம் துளியும் கெடாது சுருக்கி சிறப்பு செய்துள்ளார். 

‘பானைச்சோற்றுக்கு பருக்கைச்சோறு பதமாக’ என்னும் சொற்பதம் இங்கு பயன்படாது. ஏனெனில் படலங்கள் உள்ளடக்கிய பாடல்கள் ஒவ்வொன்றிலும் கவியின் திறமும் காட்சி நயமும் எதுகை மோனைகளும் எழிற் சந்தங்களும், அழகு வர்ணனைகளும், அணி இலக்கணங்களும், பொருண்மையும், பொருத்தமான உவமைகளும், கற்பனை வளமும், காவிய மாந்தரின் உணர்வெழுச்சியும் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கும்போது ஒன்றை மாத்திரம் தெரிவு செய்தல் எவ்வளவு கடினம்?

50 பாடல்கள் கொண்ட பரசுராமப் படலத்தை இரண்டே பாடல்களால் மிக அழகாக விளக்கிவிட்டார். பரசுராமரை ஏன் கொல்லவேண்டும் என்றும் ஏன் கொல்லக்கூடாது என்றும் இராமன் குறிப்பிட்டு, நாணேற்றப்பட்ட இராம பாணத்துக்கு இலக்காக எதைக் கொள்ள எனக் கேட்கும் பாடலையும் அதற்கு பரசுராமர் விடை பகரும் பாடலையும் தெரிவு செய்துள்ளதன் மூலம் பரசுராமப் படலம் வாசகர்க்கு எளிதில் விளங்கவைக்கப்படுகிறது.

காவியத்தின் முழுமையான புரிதல் வேண்டி, இந்நூலில் ஒவ்வொரு காண்டத்தைத் துவங்கும் முன்பும் ரத்தினச் சுருக்கமாக அக்காண்டம் பற்றிய விளக்கம் ஆங்கிலத்தில் மிக இலகுவான வடிவில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு படலத்திலிருந்தும் தெரிவு செய்த பாடலோடு கூடவே அதன் ஆங்கிலக் கவிதை வடிவமும் தரப்பட்டுள்ளது. அடுத்து அப்பாடலுக்கான பொருள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளது. தமிழை எழுதவும் படிக்கவும் சிரமப்படுவோர் எளிதில் வாசிக்க, அப்பாடலை ஆங்கிலம் வழியாக தமிழில் உச்சரித்து (transliteration) மகிழவும் கூடுதல் வகை செய்யப்பட்டுள்ளது.

அயல்மொழிகட்குப் பரிச்சயமற்ற தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான விளக்கங்களும் எளிதில் விளங்கக்கூடிய வண்ணம் தரப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சில.

வேள்வி – Fire sacrifice ritual, sacrificial fire; ஊழி deluge; புஷ்பக விமானம் – gemstone-decorated aircraft; அமுதம் – remedial nectar; கவரி – yak-hair fan; வெண்கொற்றக் குடை – white umbrella of royalty; சூடாமணி – The hair ornament

கவரி என்பதை ‘flywhisk’ என்று பொதுவாகக் குறிப்பிடாமல் ‘Yak-hair fan’ என்று துல்லியமாகக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் நூலாசிரியர் எடுத்துக்கொண்ட சிரத்தை தெளிவாகத் தெரிகிறது.

தாரை வார்த்தல் என்பதை Pouring the holy water என்கிறார். எவ்வளவு எளிமையான விளக்கம்! இது ஒரு திருமணச் சடங்கு என்பதைக் குறிப்பிடும் வண்ணம் அடுத்த வரியில் he followed the sacred rituals என்று கூடுதல் விளக்கமளிக்கிறார்.

காற்று வந்து அசைத்தலும் – இந்த வரிகளை அப்படியே மொழிமாற்றம் செய்யாது, ‘சஞ்சீவி மலையின் காற்று அசைந்து வந்து படவும்’ என்று தமிழிலும் ‘The medicinal air from the Herbal Mountain touched’ என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடுவதன் மூலம் பாடலின் உட்கருத்தை வாசிப்போர் ஐயமின்றி விளங்கிக்கொள்ள வழிவகுக்கிறார்.

ஆங்கிலவழிக் கவிதை விளக்கங்கள் பல பாடல்களில் ‘அட’ என்று எண்ண வைக்கின்றன. உதாரணத்துக்கு இரண்டு பாடல்கள்.

(1)    இராமன் காட்டுக்குச் சென்ற செய்தி அறிந்த பரதன், கோசலையில் பாதங்களில் வீழ்ந்து கதறுகிறான்.

தாய் பசி உழந்து உயிர் தளரத் தான் தனிப்

பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்

நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அத்

தீ எரி நரகத்துக் கடிது செல்க யான் (பள்ளிபடைப் படலம்)

 

Bharata who had fallen at Kosalai’s feet, started to list that,

‘The sinner, who takes care of his hunger while his mother starves to death,

Who witnesses the death of his King in the war front but saves his own life,

Would all go to the burning hell, but let I should reach hell before them’

 

(2)    அசோகவனத்தில் கவலையே உருவான சீதை, நிலவைப் பார்த்துக் கூறுகிறாள்

கல்லா மதியே கதிர்வாள் நிலவே

செல்லா இரவே சிறுகா இருளே

எல்லாம் எனையே முனிவீர் நினையா

வில்லாளனை யாதும் விளித்திலீரோ (உருக்காட்டுப் படலம்)

 

Never learnt and just shine reflecting the Sunlight, Oh Moon!

Unending and intensifying darkness, Oh Night!

All of you infuriate towards lonely me,

But not Raman with bow, who never think of me!

எவ்வளவு அழகான தெளிவான விளக்கப் பாடல்கள்!

இந்நூலில் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம் கம்ப ராமாயணத்தின் கதை மாந்தர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது Rama, Bharatha, Sita, Lakshmana, Hanuman, Ravana, Vibhishana, Kumbhkarna என்று இல்லாமல் Raman (ராமன்), Bharathan (பரதன்), Seethai (சீதை), Lakshmanan (லக்ஷ்மணன்), Anuman (அனுமன்), Ravanan (ராவணன்), Vibeeshanan (விபீஷணன்), Kumbhakarnan (கும்பகர்ணன்) என தமிழில் உச்சரிப்பது போன்றே குறிப்பிட்டிருப்பது.

Glimpses of Kamba Ramayanam என்னும் இந்நூல், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்களின் தீவிரத் தமிழ்ப்பற்றுக்கும், நாடு, மொழி, மதம், இனம் மற்றும் தலைமுறைகள் கடந்து தமிழின் காப்பியச் சிறப்பைக் கொண்டுச்செல்ல விழையும் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்கும் பெரும் சான்று.

எண்ணற்ற விருதுகளும் சிறப்புகளும் பெற்றிருக்கும், ஏராளமான பொறுப்புகளை நிர்வகிக்கும் அன்னாரது உழைப்பினாலும் சீரிய முயற்சியினாலும் உருவாக்கப்பட்ட இந்நூல் எப்பேதமும் அற்று உலக மக்கள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும், தமிழின் சிறப்பு பாரெங்கும் ஓங்க வேண்டும், கம்பனின் காவியத்திறம் மொழி கடந்தும் விதந்தோதப்பட வேண்டும் என்னும் பேரவா எழுகிறது.

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்

பாரதியின் இவ்வாக்கினை மெய்ப்பிக்கும் முகமாக இந்நூல் உலகம் முழுவதும் சென்றடைந்து, இப்படைப்பின் நோக்கத்தை முழுமையுறச் செய்ய வேண்டுமாய் வாழ்த்தி மகிழ்கிறேன்.

*****

25 November 2025

பூச்சி வேட்டை

 

1. சிலந்தியின் ஈ வேட்டை

கடந்த ஒரு வாரமாக பூச்சி வேட்டையில் ஈடுபட்டிருந்தேன். பூச்சி வேட்டை என்றதும் பல்லி, தவளை, சிலந்தி போல பூச்சிகளை வேட்டையாடினேனோ என்று எண்ணவேண்டாம். பெயர்தான் Bug Hunt.  ஆனால் பறவைகள் கணக்கெடுப்பு போல் இதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்னெடுப்புதான். குடிமக்கள் அறிவியலின் மற்றுமொரு அங்கமாக நவம்பர் 17 முதல் 24-ஆம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் Bugs in my Backyard week (2025) என்னும் சிற்றுயிர்க் கணக்கெடுப்பு நடைபெற்றது. 


நம் வீடு, வீட்டின் சுற்றுப்புறம், தோட்டம், நாம் வசிக்கும் ஊர், சுற்றுவட்டாரம் ஆகிய இடங்களில் காணப்படும் சிற்றுயிர்களைப் படம்பிடித்து அவற்றின் பொதுப்பெயர் அல்லது அறிவியல் பெயர், காணப்பட்ட இடம், உயிருடன் இருந்ததா அல்லது இறந்துகிடந்ததா, வளர்ச்சி நிலை (முட்டை, லார்வா, கூட்டுப்புழு, உருமாற்று நிலையின் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் போன்றவை), வளர்க்கப்படுவதா, இயல் வாழிடத்தில் காணப்படுவதா என்பன உள்ளிட்ட தகவல்களோடு iNaturalist தளத்தில் அல்லது உரிய செயலியில் பதிவேற்ற வேண்டும். பெயர் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. படத்தையும் இடத்தையும் பதிவு செய்துவிட்டால் போதும், தளத்தில் உள்ள வல்லுநர்கள் பெயரை உறுதி செய்துவிடுவார்கள்.

பறவைக் கணக்கெடுப்பு வாரத்தில் பெரும்பான்மை நேரம் அண்ணாந்துகொண்டு மரத்திலும் கிளையிலும் வானத்திலும் பறவைகளைத் தேடித் திரிந்தேன். பூச்சி வேட்டை வாரத்திலோ குனிந்த தலை நிமிராமல் தரையிலும் புதர்களிலும் செடிகொடிகளிலும் இண்டு இடுக்கிலும் பூச்சிகளைத் தேடிக் கொண்டிருந்தேன்.  

பூச்சி வேட்டை என்ற பொதுப்பெயர் கொடுக்கப்பட்டாலும் பூச்சிகளோடு, எறும்பு, வண்டு, சிலந்தி, நிலம்வாழ் நண்டு, நத்தை, ஓடில்லா நத்தை, தேள், மண்புழு, அட்டை, மரவட்டை, கடல் அட்டை போன்ற முதுகெலும்பிலிகள் அனைத்தும் இந்தக் கணக்கெடுப்புக்குள் அடங்கும். கடல் நண்டுகளும் கொட்டலசுகளும் (barnacles) இந்தக் கணக்கெடுப்பில் அடங்கா.


Invasive Species Council என்னும் அமைப்பு Invertebrates Australia மற்றும் Australian Geographic உடன் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்துகிறது. இந்தப் புதிய ஆய்வுத்திட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக இவ்வாண்டு Australian Geographic Society-ன் Gold Tier Award (சுமார் ஐம்பதாயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள்) என்னும் உயரிய விருதுடன் கூடிய உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பூச்சி என்றதுமே அலறுபவர் நம்மில் எத்தனைப் பேர்புழு என்றதுமே அருவருப்பு அடைபவர் எத்தனைப் பேர்நானே அதற்கு சாட்சி. புழு பூச்சிகளைக் கண்டாலே அய்யே… உவ்வே… என்றெல்லாம் ஒரு காலத்தில் முகம் சுழித்த நான் இப்போது அவற்றை அவ்வளவு ஆர்வமாகக் கூர்ந்து நோக்குகிறேன். உருப்பெருக்கிப் படமெடுக்கிறேன். அவற்றின் பெயர்அறிவியல் பெயர்தாயகம்வாழ்க்கை முறைஉணவுப்பழக்கம்இனப்பெருக்கம்விசித்திரத் திறமைகள்வாழ்வைத் தக்கவைக்கும் உத்திகள் என பூச்சிகள் தொடர்பான பல தகவல்களையும் தேடித்தேடி அறிகிறேன். அந்தக் குட்டி உலகத்துக்குள் எவ்வளவு ஆச்சர்யங்கள்எவ்வளவு கூரறிவுகள்எத்தகைய சாமர்த்தியங்கள்எவ்வளவு நுட்பமான வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கிக் கிடக்கின்றன.

2. தோட்டத்துச் சிலந்திகள் (1)

3. தோட்டத்துச் சிலந்திகள் (2)

4. தோட்டத்துக் குளவிகள்

5. தோட்டத்துக் கரப்பான்பூச்சிகள்


6. தோட்டத்து வண்ணத்துப்பூச்சிகள்

கொரோனா தொற்று உலகையே முடக்கிப் போட்டிருந்த சூழலில்தான் எனக்குப் பல புதிய கதவுகள் திறந்தன. அவற்றுள் ஒன்றுதான் பூச்சிகள் கூர்நோக்கல். புகைப்படப் பொழுதுபோக்கினாலும், வெளியில் எங்கும் போக முடியாத சூழல் காரணமாகவும், வீட்டின் பின்புறம் இருக்கிற குட்டித் தோட்டத்தையே வளைத்து வளைத்துப் படம் பிடிக்கும்போதுதான் நாம் வாழும் இதே பூமியில் நம்மோடு எவ்வளவு விதவிதமான, விநோதமான சின்னஞ்சிறு உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது. விவரம் தெரிந்த நாள் முதலாக எத்தனையோ பூச்சியினங்களைப் பார்த்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் கூட அவற்றையெல்லாம் இவ்வளவு அணுக்கமாகவும் நுணுக்கமாகவும் பார்க்கும் வாய்ப்பும் அமைந்ததில்லை. ஆர்வமும் இருந்ததில்லை. கட்டாய வீட்டு முடக்கம் அந்த நல்வாய்ப்பினைத் தந்தது. பறவைகளைக் கூர்நோக்குதல் போல் பூச்சிகளைக் கூர்நோக்குவதும் மிக சுவாரசியமானப் பொழுதுபோக்கு. 

இதுவரை தோட்டத்தில் நான் படம்பிடித்த பூச்சியினங்களுள் சிலவற்றின் தொகுப்பைதான் இப்பதிவில் இணைத்திருக்கிறேன். தொகுக்கப்படாதவையும் பெயர் தெரியாதவையும் இன்னும் ஏராளம் உள்ளன. 

7. தோட்டத்துத் தேனீக்கள்

8. தோட்டத்து ஈக்கள்

9. தோட்டத்து வண்டுகள்

10. தோட்டத்தின் பிற பூச்சியினங்கள்

11. தோட்டத்துத் தட்டான்கள்

12. தோட்டத்து வெட்டுக்கிளிகளும் கும்பிடுபூச்சிகளும்

13. தோட்டத்து அந்துப்பூச்சிகள்

பூச்சிகளைக் கணக்கெடுத்து என்னாகப் போகிறது என்று பலருக்கும் தோன்றலாம். சுற்றுச்சூழலைப் பேணவும் உணவுச்சங்கிலி அறுந்துவிடாமல் பாதுகாக்கவும் பூச்சிகள் முக்கியம். பூச்சிகள் இல்லையென்றால் பிற உயிரினங்களும் இருக்காது. அவ்வளவு ஏன்? மனிதகுலமும் இருக்காது. மகரந்தச்சேர்க்கை, இறந்த உடல்களை மக்க வைத்து உரமாக மாற்றுதல், கேடு விளைவிக்கும் பூச்சியினங்களைக் கட்டுக்குள் வைத்தல், மண்ணுக்கு வளம் சேர்த்தல் என இப்பூவுலகில்  பூச்சிகளின் பங்கு பெரும் பங்கு.

நம் வாழிடத்தில் என்னென்ன பூச்சியினங்கள் காணப்படுகின்றன?  அவற்றுள் எவை அந்நிய சிற்றுயிரிகள்? pest  என்ற வகைப்பாட்டுக்குள் வருபவை எவை? எந்தெந்த பூச்சியினங்கள் கட்டுப்படுத்தவேண்டிய சூழலில் உள்ளன? இதுவரை கண்டறியப்படாத புதிய பூச்சியினங்கள் காணக்கிடைக்கின்றனவா? உள்நாட்டின் எந்தெந்தப் பூச்சியினங்கள் அழிவுக்கு ஆளாகியுள்ளன? போன்ற பல கேள்விகளுக்கான விடையாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குடிமக்களின் பங்கை உணர்த்தவும், சின்னஞ்சிறு உயிர்களின் சிறப்புகளை அறிந்து வியக்கவும்  இக்கணக்கெடுப்பு உதவும் என்கிறார் குடிமக்கள் அறிவியலின் ஒருங்கிணைப்பாளர்.

தோட்டத்தில் கடந்த பத்தாண்டுகளாக நான் நான் படம்பிடித்த பூச்சியினங்கள் ஐநூற்றுக்கும் மேல் இருக்கலாம். அவற்றில் சுமார் நூறு பூச்சியினங்களையாவது இந்த ஒரு வார காலத்தில் படம் பிடித்து பதிவு செய்யலாம் என்று எண்ணியிருந்தேன். சோதனையாக பல பூச்சிகள் கண்ணில் அகப்படவே இல்லை. கண்ணில் அகப்பட்டாலும் படமெடுக்க அகப்படவில்லை. சுமார் 72 பூச்சியினங்களை மட்டுமே என்னால் பதிவு செய்ய முடிந்தது. இன்னும் பல பூச்சியினங்கள் கோடை ஆரம்பித்த பிறகுதான் வரத்தொடங்கும். 

4,521 பேர் கலந்துகொண்ட இந்த ஆய்வுத்திட்டத்தில் நான் 90-ஆவது இடத்தில் இருக்கிறேன். சுற்றுச்சூழல் பேணும் ஒரு ஆய்வுக்கு என்னாலான பங்களிப்பை நல்கினேன் என்பதே பெரும் மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகிறது!

14. சால்வியா பூக்களைத் தேடிவரும் நீலவரித் தேனீ

*******

18 November 2025

நீல நாக்கு அரணை

 

1. நீல நாக்கு அரணை

எங்கள் தோட்டத்தில் அடிக்கடி காட்சி தருபவை இந்த நீல நாக்கு அரணைகள். சில சமயங்களில் குட்டிகளையும் பார்த்திருக்கிறேன். வீட்டை ஒட்டி நிறைய இண்டு இடுக்குகள் இருப்பதாலும் வீட்டுக்குப் பின்புறம் உள்ள சிறு வாய்க்கால் முழுவதும் காட்டுச்செடிகள் புதராய் மண்டிக்கிடப்பதாலும்  இவற்றுக்கு போதிய இரை கிடைக்கிறது போலும். அதனால்தான் இங்கேயே சுற்றிச் சுற்றி வருகின்றன. 

2. தோட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்போது

சுமார் இரண்டு அடி நீளத்தில் கட்டைகுட்டையான உருவத்துடனும் பாம்பு போன்ற தோலுடனும் நீட்டி நீட்டி உள்ளிழுக்கும் நீல நிற நாக்குடனும் காணப்படும் இவற்றைப் பார்த்து ஆரம்பத்தில் பயந்திருக்கிறேன். ஆனால் இவற்றால் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் மாறாக, நத்தைகளையும் புழு பூச்சிகளையும் தின்பதால் இதன் இருப்பு தோட்ட ஆர்வலர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது என்றும் தெரியவந்தபோது நீல நாக்கு அரணை மீதான பயம் விலகி பாசமே வந்துவிட்டது.

3.  இரையின் வாசம் பிடிக்கும் நீல நாக்கு அரணை

எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே இயற்கை தந்த சிறப்பம்சம்தான் அவற்றின் நீல நாக்கு. நீலம் என்றாலே விஷம் என்று நம் மனதில் பதிந்துபோனதால் இவற்றைப் பார்த்தவுடன் விஷ அரணை என்று நினைத்து பயந்து ஒதுங்கிப் போகிறோம். உண்மை என்னவென்றால் இவற்றுக்கு விஷம் கிடையாது. ஆபத்து நெருங்குவதாய் உணர்ந்தால் தற்காப்புக்கான முயற்சியாக வாயை அதிகபட்சமாகத் திறந்து நீல நிற நாக்கை வெளிக்காட்டும். அது மட்டுமல்ல, பாம்பு போல் தலையை உயர்த்தி, பாம்பு போலவே ஸ்ஸ்ஸ் என்று சத்தமாய் இரையும். அதற்கு மேலும் அங்கு ஏதாவது நிற்குமா அல்லது யாராவது நிற்பார்களா? இவ்வளவு எச்சரிக்கைகளையும் மீறி நெருங்கினால் கூர்மையான பற்களால் கடிதான். நீல நாக்கு அரணைகள் விஷமற்றவை என்பதால் காயம் சில நாட்களில் ஆறிவிடுமாம். நமக்கு ஏன் அந்த விஷப் பரிட்சையெல்லாம்?  கோட்டைத் தாண்டி நீயும் வராதே, நானும் வரமாட்டேன் என்று டீல் பேசிவிட்டேனாக்கும். 

4.சட்டென்று பார்த்தால் பாம்போ என எண்ணத் தோன்றும் உடலமைப்பு

நீலநாக்கு அரணைகள் பாம்புகளைத் தின்னும் என்பது பலருடைய நம்பிக்கை. மாறாக, இவைதான் பாம்புகளுக்கு இரையாகின்றன. என்னதான் பாம்பைப் போல தலையுயர்த்தி எச்சரித்தாலும் பாம்புகளிடம் இவற்றின் பாச்சா பலிப்பதில்லை.  பாம்பு மட்டுமல்ல, நாய், பூனை போன்ற விலங்குகளும் கூக்கபரா, கழுகு போன்ற பறவைகளும் இவற்றை எளிதில் வேட்டையாடித் தின்னும். நான் தினமும் நடக்கும் பாதையோரம் ஒருநாள் இறந்துகிடந்த நீல நாக்கு அரணையைப் பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்தினம்தான் ஒரு பூனை அதே இடத்தில் வெகுநேரமாய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். 

5. நீல நாக்கு அரணை

நீல நாக்கு அரணைகளும் பாம்பு, உடும்பு போன்றவற்றைப் போல் தங்கள்  நாக்கை நீட்டி நீட்டி உள்ளிழுக்கும். காரணம் என்ன தெரியுமா? காற்றில் கலந்திருக்கும் வாசனை மூலக்கூறுகளை சேகரித்து வாய்க்குள் இருக்கும் உணர் உறுப்புக்குச் செலுத்துவதன் மூலம் தங்கள் இரை இருக்குமிடத்தைக் கண்டறிகின்றன. நீல நாக்கு அரணை ஒரு அனைத்துண்ணி. பூச்சி, நத்தை, தவளை, சிறிய பறவைகள், மற்ற சிறிய ஊர்வன, இறந்துபோன விலங்குகள், பழங்கள், இலைகள் என அனைத்தையும் தின்னும். பகல் முழுவதும் இரைதேடும். இரவில் தூங்கி ஓய்வெடுக்கும். 

6. தொட்டிச் செடிகளுக்கு மத்தியில்

நீல நாக்கு அரணைகள் ஆஸ்திரேலியாவிலும் இந்தோனேஷியா, பப்புவா நியூகினி தீவுகளிலும் காணப்படும் தனித்துவமிக்க ஊர்வனவாகும். ஆஸ்திரேலியாவில் ஏழு வகையான நீல நாக்கு அரணைகள் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியர்கள் இவற்றைச் செல்லமாய் Blueys என்கிறார்கள். எங்கள் தோட்டத்தில் வளைய வருபவை கிழக்குப்பகுதி நீலநாக்கு அரணைகள் (Eastern blue-tongue lizards/ Eastern blue-tongue skinks) 

7. தண்ணீர்த்தொட்டிக்கும் சுவருக்கும் இடையில்

நீல நாக்கு அரணைகள் கூச்ச சுபாவிகள் என்பதால் அவ்வளவு எளிதில் நம் முன் வாரா. எனினும் தோட்டத்துக்குப் போகும்போது பெரும்பாலும் கையில் மொபைல் இருப்பதால் சட்டென்று இவற்றைப் படம்பிடிக்க முடிகிறது.  கேமராவில் ஒரு நல்ல ஒளிப்படம் என்றாவது சிக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். 

8. நீல நாக்கு அரணைக் குட்டி வெயில் காய்கிறது

நீல நாக்கு அரணை முட்டையிடாது. குட்டிதான் போடும். ஒரு ஈட்டுக்கு 20 குட்டிகள் வரை போடும். நீல நாக்கு அரணை இனத்திலேயே அதிக குட்டிகள் போடுவது கிழக்குப்பகுதி நீல நாக்கு அரணைதான். இவற்றின் ஆயுட்காலம் 20 முதல் 30 வருடங்கள். நன்கு வளர்ந்த நீல நாக்கு அரணையின் எடை சுமார் ஒரு கிலோ வரை இருக்குமாம். 

நீல நாக்கு அரணைகள் பலவும் அவற்றின் வித்தியாசமான உடல் அமைப்பாலும் நீல நாக்கின் வசீகரத்தாலும் சில நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவுக்குள் இவற்றை வளர்ப்பதற்கு முறையான உரிமம் பெற்றிருத்தல் அவசியம். கள்ளச்சந்தையில் ஒரு நீல நாக்கு அரணையின் மதிப்பு சுமார் நான்காயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் இரண்டேகால் லட்ச ரூபாய்) என்பதால் இவை ஆஸ்திரேலியாவிலிருந்து பிற நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. பல முயற்சிகள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன என்றபோதும் கடத்தல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது வருத்தமளிக்கும் தகவல்.   

9. நீல நாக்கு அரணைக்குட்டி

31 October 2025

பறவைத் தேர்தல்

ஆஸ்திரேலியாவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை  ‘நடப்பாண்டு ஆஸ்திரேலியப் பறவையைத்’  தேர்ந்தெடுக்கும் இணைய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. Guardian Australia செய்தி நிறுவனமும் இயல்பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடச் சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் Birdlife Australia என்னும் லாபநோக்கற்ற நிறுவனமும் இணைந்து 2017-ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்த வாக்கெடுப்பை நடத்துகின்றன. 

என் பறவை ஆல்பத்திலிருந்து சில ஆஸ்திரேலியப் பறவைகளின் தொகுப்பு:

1. ஆஸ்திரேலியப் பறவைகள் (1)

2. ஆஸ்திரேலியப் பறவைகள் (2)

3. ஆஸ்திரேலியப் பறவைகள் (3)

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 850 பறவையினங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பாதி ஆஸ்திரேலியாவைத் தவிர வேறு எங்கும் காணப்படாத அபூர்வப் பறவைகள். சில பறவையினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. சில அழிந்தே விட்டன. இருக்கும் பறவையினங்களையாவது அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஒரு பகுதியாக இப்போட்டி நடைபெறுகிறது. 

‘2025-ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியப் பறவை’க்கான வாக்கெடுப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. முடிவு கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 

4. நடப்பாண்டுப் பறவையான செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை

சுமார் 12,000 வாக்குகள் பெற்று ‘2025-ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியப் பறவை’ என்ற சிறப்பை செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை பெற்றுள்ளது. பெரும்பாலானோரின் விருப்பப் பறவையாகவும் இந்த ஆண்டின் சிறப்புப் பறவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

எந்தப் பறவையைத் தேர்ந்தெடுத்தாலும் அது எந்தப் பறவைக்கும் தெரியப்போவதில்லை. பிறகு எதற்கு இவ்வளவு மெனக்கெடல்?   

சுற்றுச்சூழல் அறிவை மேம்படுத்தவும், நம்மைச் சுற்றியுள்ள பறவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், பறவைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவும், அழியும் தருவாயில் உள்ள பறவையினங்களை மீட்டெடுக்கவும் இத்தகு போட்டிகளும் வாக்கெடுப்பும் உதவுவதாக கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் வாக்கெடுப்பு. அதில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய மேக்பை (Australian magpie).

5. ஆஸ்திரேலிய மேக்பை

இரண்டாமிடம் குப்பைத்தொட்டிக் கோழி (Bin chicken) என்ற பட்டப்பெயர் இடப்பட்ட ஆஸ்திரேலிய வெள்ளை அன்றிலுக்கு (Australian white ibis).

6. ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில்

2019-ல் முதலிடம் கருந்தொண்டைக் குருவிக்கு Black-throated finch;

இரண்டாமிடம் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு Tawny frogmouth


7. முதலிரண்டு இடம் பிடித்தப் பறவைகள்- 2019

2021-ல் முதலிடம் சூப்பர் தேவதைச்சிட்டுக்கு Superb fairy wren; 

இரண்டாமிடம் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு Tawny frogmouth


8. முதலிரண்டு இடம் பிடித்தப் பறவைகள்- 2021


2023-ல் முதலிடம் துரிதக்கிளிக்கு Swift parrot; 

இரண்டாமிடம் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு Tawny frogmouth


9. முதலிரண்டு இடம் பிடித்தப் பறவைகள்- 2023

இவ்வாறு கடந்த மூன்று முறையும் தொடர்ச்சியாக இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்த செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையை இந்த வருடம் முதலிடம் பெற வைத்துவிட்டனர் அதன் தீவிர ஆதரவாளர்கள்.  

இரண்டாமிடம் 7,600 வாக்குகள் பெற்ற பாடின் கருப்பு காக்கட்டூவுக்குக் (Baudin’s black cockatoo) கிடைத்துள்ளது. 

10. பாடின் கருப்பு காக்கட்டூ

பாடின் காக்கட்டூதான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்து மனம் நொந்துபோன பாடின் காக்கட்டூ ஆதரவாளர்கள் எப்படியும் அடுத்த முறை அதை முதலிடத்துக்குக் கொண்டுவருவோம் என சபதம் எடுத்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியப் பறவைத் தேர்தல் எப்படி நடைபெறுகிறது? பறவைகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன? 

ஆயிரக்கணக்கான கார்டியன் வாசகர்களால் அவரவர்க்குப் பிடித்தமான பறவைகள் நாமிநேட் செய்யப்படுகின்றன. நாமினேட் செய்யப்பட்ட பறவைப் பட்டியலில் இருந்து முதல் கட்டமாக 50 பறவைகள் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றுள் எது முதன்மை என்பதில் போட்டி ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இணைய வாக்கெடுப்பு நடைபெறும். ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கலாம். அன்றன்றைய தின வாக்குகளின் அடிப்படையில் பின்தங்கியிருக்கும் ஐந்து பறவைகள் போட்டியிலிருந்து நீக்கப்படும். கடைசியாக எஞ்சியிருக்கும் பத்துப் பறவைகளுக்குள்தான் கடுமையான இறுதிப்போட்டி.

இந்த ஆண்டு களத்தில் நின்ற கடைசிப் பத்துப் பறவைகள்:


11. கடைசிப் பத்துப் பறவைகள்
  1. செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை (Tawny frogmouth) 
  2. பாடின் கருப்பு காக்கட்டூ (Baudin’s black cockatoo) 
  3. கேங்-கேங் காக்கட்டூ (Gang-gang cockatoo) 
  4. வில்லி வாலாட்டிக்குருவி (Willie wagtail) 
  5. புதர் உறை கண்கிலேடி (Bush stone-curlew) 
  6. தென்பகுதி ஈமு-குருவி (Southern Emu-wren) 
  7. சிரிக்கும் கூக்கபரா (Laughing kookaburra) 
  8. சிறிய பென்குயின் (Little penguin) 
  9. புள்ளி பார்டலோட் (Spotted pardalote) 
  10. ஆப்புவால் கழுகு (Wedge-tailed eagle)

இந்தப் பட்டியலில் சில பறவைகளை இயல் வாழிடத்தில் பார்த்திருக்கிறேன். சிலவற்றைப் புகைப்படமும் எடுத்திருக்கிறேன். மூன்றை எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்திலேயே பார்க்கலாம். ஆனால் முதலிடத்தில் இருக்கும் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையை?  உருமறைப்பு உத்தியில் கைதேர்ந்த அவற்றைக் காண்பது மிகவும் அரிது. 

12. செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை இணை

சில வருடங்களுக்கு முன்பு அந்த அரிய வாய்ப்பும் கிடைத்தது. 2017-ஆம் ஆண்டு, சிட்னி ராயல் தாவரவியல் பூங்காவில் தற்செயலாகத்தான் பார்த்தேன். செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை இணையொன்று ஆடாமல் அசையாமல் பனை போன்றதொரு மரத்தின் நிறத்தோடு நிறமாகப் பொருந்தி வெயில் காய்ந்துகொண்டிருந்தன. தற்செயலாக அவற்றைக் கண்ணுற்றது என்னுடைய நற்பேறு என்றுதான் சொல்லவேண்டும். அதன் பிறகு வேறெங்கும் நான் அவற்றை இயல் வாழிடத்தில் பார்க்கவில்லை. கீழே உள்ள படம் உயிர்க்காட்சி சாலையில் எடுத்தது.

13. செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை

Frogmouth என்பதற்கு தமிழில் ‘தவளைவாயன்’ என்ற பெயர் இடப்பட்டுள்ளது. எனக்கு அதில் உடன்பாடில்லை. பெண் இனத்தைக் குறிப்பிடும்போது ‘பெண் தவளைவாயன்’ என்றால் நன்றாகவா இருக்கிறது? அதனால் பொதுப்பெயராக ‘தவளைவாய்ப் பறவை’ என்று நானே வைத்துக்கொண்டேன்.

செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையின்பால் அனைவரின் கவனமும் தற்போது குவிந்திருப்பதால் அவ்வினம் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சனையும் கவனத்துக்கு வந்துள்ளது. எலிகளைக் கொல்ல வைக்கப்படும் எலிவிஷத்தால் எலிகள் மட்டுமல்ல, அவற்றைத் தின்னும் பறவைகளும் இரண்டாம்கட்ட நச்சுத்தாக்குதலுக்கு ஆளாகி இறக்கின்றன. எலிவிஷத்தால் பாதிக்கப்படும் பறவைகளின் வரிசையில் கழுகு, ஆந்தை இவற்றோடு செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையும் உள்ளது. எனவே கடுமையான எலிவிஷங்களை விற்பனை செய்வதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதிக்கவேண்டும் என இங்குள்ள பறவை ஆர்வலர்கள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை பற்றி கூடுதல் தகவல்கள் தெரிய வேண்டுமா? 

பத்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதியிருக்கும் இப்பதிவை வாசித்து அறிந்துகொள்ளலாம். 

சரி, நீ எந்தப் பறவைக்கு வாக்களித்தாய் என்று கேட்கிறீர்களா? சந்தேகமே வேண்டாம், தன் சிரிப்பொலியால் கேட்போரை வசீகரித்து நம்மை அறியாமலேயே நம் உதட்டில் சிறு முறுவலை எழச்செய்யும் ‘சிரிக்கும் கூக்கபரா’வுக்குதான் என் வாக்கு.   

👇

14. சிரிக்கும் கூக்கபரா